தமிழிசை - அன்றும் இன்றும்
முனைவர் இரா. திருமுருகன்

தெலுங்கிசைத்தால் மறுப்பீர்கள் தமிழே பாடச் செய்யுங்கள் அதற்காகத் திரண்டெழுங்கள்! இலங்குதமிழ் மொழியினிலே பாடல் இல்லை எனஉரைத்தால் அறையுங்கள்! (எது இசை?) என்று பாடினார் பாவேந்தர்.

விலையில்லாப் பெருமைபல உடையதேனும் விளங்காத மொழியினிலே பாட்டைக்கேட்டுத் தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட்டாலும் தனக்கதுவோர் கலையின்பம் தருவதுண்டோ?

என்று பாடினார் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. என்றாலும் இன்றுவரையில் தெலுங்கில் பாடும் வழக்கமே இருந்துவருகிறது.

வரலாற்றுக் கெட்டாத தொன்மைக்காலத்தில் தோன்றி வளர்ந்துவந்த தமிழிசைக்கு கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடநாட்டுச் சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரம் தான் இலக்கணநூல் என்றும், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இருந்த தியாகராசர் (1767-1847), சியாமா சாத்திரி (1762-1827), முத்துசாமி தீட்சிதர் (1776 - 1835) ஆகியோர்தாம் முதன்முதல் கர்நாடக சங்கீதம் பாடிய சங்கீத மும்மூர்த்திகள் என்றும் சிலர் அறியாமையாலோ, வேண்டுமென்றோ கூறிவருகின்றனர். இவர்களுக்கு முன்பு 4ஆம் நூற்றாண்டுகளில் பண்ணிசை பாடிய காரைக்காலம்மையார், 7, 8ஆம் நூற்றாண்டுகளில் தமிழிசை பாடிய முத்துத்தாண்டவர் (1560-1640), மாரிமுத்தா பிள்ளை (1712 -1787), அருணாசலக் கவிராயர் (1711-1779) ஆகியோரை அறிந்தவர்களும் மறைக்கின்றனர். சில இனத்தார் இசைக்கலைக்குத் தாமே உரியவர்கள் என்று சொந்தங் கொண்டாடி வருகின்றனர்.

3. பகுத்தறிவுக் கொள்ளையினர் இசையைப் பார்ப்பனர்களின் சொத்து என்று தவறாகக் கருதிப் புறக்கணிக்கின்றார். தமிழ்ப்பண்பாடு ஆரியர்களால் கெட்டது என்று கருதும் தன்மான இயக்கத்தினர், பார்ப்பனர்களில் பெரும்பாலோர் ஈடுபடும் கருநாடக சங்கீதத்தை வெறுக்கின்றனர். அதற்கு வடமொழி, தெலுங்குப் பக்திப் பாடல்களையே அவர்கள் விரும்பிப் பாடுவதும் ஒரு காரணம். இவ்வாறு, தமிழர் கண்ட மரபிசை, பாதுகாக்கவேண்டிய அவர்களாலேயே, அறியாமையால் புறக்கணிக்கப்படுவது மட்டுமன்றி, அதைக் கவர்ந்து கொண்டு தம்முடையது என்பவர்க்குத் தாரைவார்த்துத் தரப்படுகிறது.

4. பார்ப்பனர்களில் பெரும்பாலோர் இசையுணர்வு உடையவர் களாகவும், பார்ப்பனர் அல்லாதோரில் பெரும்பாலோர் இசையுணர்வு இல்லாதவர்களாகவும் உள்ளனர். பார்ப்பனரல்லாதோரில் இசையுணர்வுடைய சிறுபான்மையரில் பகுத்தறிவாளர்கள் கடவுட் பாடல்களைப் பாடுவதில்லை. கேட்டுச் சுவைப்பதுமில்லை. எனவே, தமிழிசைக்கு ஆதரவானவர்கள் மிகமிகச் சிலராகவும், எதிரானவர்கள் மிகமிகப் பலராகவும் உள்ளனர். அதனால் தமிழில் பாடும் வழக்கம் தழைக்க வழியில்லை; தமிழ்ப்பாடல்கள் மெருகேறும் வாய்ப்புமில்லை.

5. இசைப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், வடமொழி இசைக்கலைச் சொற்களையும், வடமொழி தெலுங்கு உருப்படிகளையும் கற்பிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. ஷட்ஜம், ரிஷபம், முதலிய கலைச்சொற்களையும், கீதம், வர்ணம், கீர்த்தனை முதலிய உருப்படிகளையும் வடமொழியிலும் தெலுங்கிலும் கற்பிக்கும் வழக்கம் 16ஆம் நூற்றாண்டுமுதல் இன்றுவரை மாறாமல் இருந்துவருகிறது. அதனால் இசை கற்றுப் பாடகர்களாக வருவோர், தாம் கற்ற தெலுங்கு உருப்படிகளையே இசையரங்குகளில் பாடுகின்றனர். தம் மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். புதிய பாடல்களைத் தமிழில் பாடினால் தம் முழுத்திறமையும் வெளிப்படாது எனத் தயங்குகின்றனர். இது முறையான அச்சமே.

6. பார்ப்பனர்களில் சிலரால் தமிழ்மொழி ஒரு 'நீச பாஷை' என்று இழிவாக மதிக்கப்படுகிறது. அதனால், தமிழில் பாடுவதை வெறுக்கின்றனர். இசைநலங் கனிந்த தேவராம், நாலாயிரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா, காவடிச்சிந்து முதலிய பாடல்களை, வற்புறுத்தினால் மட்டும், இசையரங்கின் இறுதியில் துக்கடாவாகப் பாடுகின்றனர்.

7. மரபிசையைப்பாடும் முறையில் இன்று பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பண்டைக் காலத்தில் மரபிசையானது உணர்வு வெளிப்பாட்டுக்கு மட்டுமே பயன்பட்டது. பொருளுக்கும் உணர்வுக்கும் சிறப்பிடந் தந்து, கேட்போர்க்கு விளங்கும் மொழியில் இசைப் பாடல்கள் பாடப்பட்டன. அப்போது 'கலை வாழ்க்கைக்காகவே' என்ற நிலை இருந்தது. இன்றைய மரபிசை பாடும் முறையில் பெரும்பாலும் 'கலை கலைக்காகவே' என்ற நிலை காணப்படுகிறது. பண்ணை நீண்ட நேரம் ஆளத்தி (ஆலாபனம்) செய்தல், பலவகையான தாளங்களிலும் தாளநடைகளிலும் பாடல்களை இசை அமைத்துப்பாடுதல், ஒரே வகையில் பாடாமல் பல நுட்ப வேறுபாடுகள் காட்டிச் சங்கதி போட்டுப்பாடுதல், நிரவல் செய்தல் கற்பனையாகச் சுரக்கோவைகளைப் பாடுதல், தாளத்தில் நுட்பமான கணக்கு வேறுபாடுகள் காட்டுதல் முதலிய, பாடகரின் புலமையை வெளிப்படுத்தும் காட்சியரங்காகவே இசையரங்குகள் இன்று நகழ்கின்றன. இவை இசைக்கலையின் வளர்ச்சியைக் குறித்தாலும் அமைதியான இறைவழிபாட்டுக்கும், இசை நுகர்ச்சிக்கும் இடையூரான வெறும் ஆரவாரங்களாகவே சான்றோர்களால் கருதப்படுகின்றன.

8. மக்கள் தொடர்பு கருவிகள் இன்று மரபிசையை மக்களிடம் எளிதில் கொண்டு செல்லுகின்றன. பழங்காலத்தில் இசையரங்கு நிகழுமிடம் சென்று தரமான இசையை நேரில் கேட்டு இன்புறும் நிலையே இருந்தது. விழாக்களிலும் வீட்டு நிகழ்ச்சிகளிலும் நிகழும் இசையரங்குகளில் மட்டுமே இசை நுகரும் வாய்ப்பு இருந்தது. இதற்காக அன்று பல காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. பலகல் தொலைவு சென்று வர வேண்டியிருந்தது. ஆனால் இன்று வானொலி, தொலைக்காட்சிகளில் நல்ல இசையரங்குகள் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றை வீட்டிலிருந்தவாறே நுகரும் வாய்ப்புகள் வளர்ந்துள்ளன. வானொலியில் மரபிசைப் பயிற்சியும் நடத்தப்படுகிறது. இது பலரும் எளிதில் இசை கற்கப் பயன்படுகிறது. தொலைக் காட்சிகளில் இசைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இசையில் திறமை காட்டி வெற்றி பெறும் போட்டி மனப்பான்மையை இவை இளைஞரிடையே வளர்க்கின்றன. மரபிசையின் பரவலுக்கு இது வழிவகுக்கிறது.

9. திரைப்படங்கள் தமிழிசை வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்கன்றன. மரபிசையைத் தெலுங்கு மொழியில் கேட்டுவந்த தமிழர்களுக்கு நாடகங்களில் மட்டுமே தமிழில் பாடல் கேட்கும் வாய்ப்பிருந்தது. இது பேசும் படங்கள் வந்த பிறகு மேலும் விரிவானது. தமிழ் மக்கள் முழுக்க மழுக்கத் தமிழில் மட்டுமே இசைப்பாடல்களைக் கேட்கும் வாய்ப்பைத் திரைப்படங்களே முதன்முதலாக ஏற்படுத்தின. அவற்றில் மெல்லிசைப்பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்களும் பெரும்பாலனவாக இருந்தாலும் மிகச்சில பாடல்கள் மரபு மாறாத செவ்விசையில் அமைந்து தமிழர்களின் செவ்விசை நுகர்வுக்குத்துணை செய்கின்றன. அவர்களது இசையறிவை மேம்படுத்திவருகின்றன.

(தொடர்ச்சி)