வந்துவிட்டார் வந்துவிட்டார் எடியூ ரப்பா
வாராது நமக்கினிமேல் குடிநீ ரப்பா!
சொந்தமெனக் கூறுகின்றார் ஒகேனக் கல்லும்
சொரணையற்றுக் கிடக்கின்றார் தமிழ கத்தார்
செந்தமிழன் தானன்று வெங்கா ளூரைச்
சிறப்புறவே ஆண்டிருந்தான் ஆகை யாலே
எங்களுக்கே சொந்தமென்று வளைத்துக் கொள்வோம்
எவன்தடுப்பான் எடுபடையை இதுவே செவ்வி!
துள்ளிவரும் காவிரியைத் தடுத்துக் கட்டித்
துளிக்கூட நீர்விடவே மாட்டோம் என்றே
எள்ளிநகை யாடுகின்றான் கன்ன டத்தான்
ஏமாந்து போய்விட்டான் தமிழ கத்தான்
தள்ளியன்று முப்பதுநாள் வைத்த தாலே
தனக்கேதான் உரிமை யென்று கருது கின்றான்
உள்ளிருந்தே கீழறுப்பார் மேலி ருந்தால்
உன்னதமாய்த் தன்னலமே ஊரை மேயும்!
கைதவத்தின் செய்தவமே தலைமை யேற்றுக்
கடைநிலைக்குத் தமிழகத்தை உய்த்த தின்று
கைநீட்டி இலவயத்தை வாங்கி உண்ணும்
கயமையினைப் புகுத்திவிட்டார் தமிழி னத்தில்
கையூட்டே இல்லாத காலம் ஒன்று
கனவினிலும் இனிவரவே போவ தில்லை
மெய்வருத்தி உழைக்காத மக்க ளன்றும்
மேன்மையுற முடியாதே இலவ யத்தால்!
அனைத்தையுமே இலவயமாய் அனைவ ருக்கும்
அனுப்புகின்றோம் வாக்களிப்பீர் என்று கேட்கும்
அணிபரப்பும் பிணிநீங்க வேண்டு மாயின்
அறியாமை இருளகற்றி யாக வேண்டும்
எனைத்தொன்றும் இலவயமாய்த் தருவ தற்கே
எங்கிருந்து பொருள்சுரக்கும் இவர்க ளுக்குத்
தனித்தன்மை குன்றவைத்தே இலவ யத்தால்
தலைகுனிய வைத்துவிட்டார் தமிழி னத்தை!
-இரா. செம்பியன்
தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485