உரூபா 500 பரிசு பெறும் பாடல் :
1.மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநா ணிலைத்திருத்தல் முடிந்தி டாது!
செழிப்புற்ற முன்னைமொழி செந்தமிழ்தன் நிலையிழந்து சீரும் கெட்டே
பழிப்புற்றுத் தாழ்ந்திழிந்தே பலவாறாய் அழிப்புறவும் பதைப்பே யின்றி
விழிப்பற்ற வித்தமிழர் வெவ்வேறு பொய்த்துய்ப்பில் வீழ்ந்தார் சாய்ந்தே!
- வயவாள்வலியன், விழுப்புரம்.
வெளியீட்டுக்குத் தேர்வுபெற்ற பாடல்கள் (தரவரிசைப்படி):
2.மொழிப்பற்றி லாதிருக்கும் இனம்நெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது;
பிழைப்புக்கு வந்தமொழி பெருமையது பெற்றமொழி பிழையு டைத்தென்(று)
இழிப்புறவே பேசிடுவான் எழில்தமிழின் பெருமைசொனால் ஏதும் கேளான்;
பழிப்புடையான் என்புகவ்வப் பல்லிளிக்கும் நாயேஅப் பண்பி லானே!
- கி. சிவகுமார், விருத்தாசலம்.
3.பொழிகின்ற நல்மழையால் வேளாண்மை மிகப்பொலிந்து புகழ்பெற் றாலும்
கொழிக்கின்ற தொழில்துறையால் வல்லரசாய்ப் பட்டியலில் கொடிநட் டாலும்
எழில்கொஞ்சும் வான்நிலவில் ஏற்றமுடன் வாழ்ந்திடவே இடம்பெற் றாலும்
மொழிப்பற்றில் லாதிருக்கு மினநெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது
- பாவலர் செ. பழனி, புதுச்சேரி.
4.செழிப்போடி ருப்பவனோ செயலாற்றும் திறத்தாலே சீரைக் காண்பான்,
விழிப்போடி லாதவனோ வீழ்ச்சியையே கண்டிடுவான் விடிவைக் காணான்
பழிப்புக்கே இடமளித்துப் பண்பட்ட தாய்மொழியைப் பயிலா விட்டால்
மொழிப்பற்றி லாதிருக்கு மினம்நெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது.
- ஆ. குமாரசாமி, சென்னை.
5.அழிப்பதுமேன் அருந்தமிழை ஆங்கிலத்தின் அடிமையாகி ஆய்க; மண்ணில்
மொழிப்பற்றி லாதிருக்கும் இனம்நெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது
விழிப்புற்றே வியன்தமிழில் விளைகல்வி விழைந்துகற்க வேண்டும் நன்றே!
செழிப்புற்றுச் செந்தமிழும் துறைதோறும் சிறந்தோங்கச் செய்க இன்றே!
- கலைமாமணி கோவி. கலியபெருமாள், புதுச்சேரி.
6.விழியிரண்டாய் விளங்குகின்ற இனம்மொழியைப் போற்றிடாது வேறா யெண்ணிப்
பழியாமல் மொழிக்கலப்பைப் பல்லிளித்துப் பாராட்டிப் பரிச ளிப்பார்
விழியொன்றில் நோய்வந்தால் மறுவிழியும் சிலநாளில் வீணாய்ப் போகும்
மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநா ணிலைதிருத்தல் முடிந்தி டாது.
- சு. சொக்கலிங்கம், புதுச்சேரி.
7.மொழிப்பற்றி லாதிருக்கும் இனம்நெடுநாள் நிலைத்திருத்தன் முடிந்தி டாது
பழியேந்திக் கிடத்தற்கோ பழந்தமிழை மறந்திட்டாய்? பழாய்ப் போனாய்
இழிவகற்றா தினியும்நீ இருந்திட்டால் எதிர்காலம் ஏற்கா துன்னை
எழிற்றமிழை ஏந்தாக்கி இனமானங் காத்திடுவாய் எழுவாய் இன்றே.
- புலவர் தங்க. ஆறுமுகன், சென்னை.
8.விழிப்பின்றிச் செயலாற்று வினைகளினால் நலமெதுவும் விளைந்தி டாதே!
ஒழிப்பதற்கே வகைசெய்யு மனங்களினால் பயனெதுவும் உண்டா காது
பழிதீர்க்கும் முயற்சியினால் பகைமைவந்து நலமெதுவும் பயந்தி டாது!
மொழிப்பற்றில் லாதிருக்கு மினநெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது
- மாநி. புதுச்சேரி.
9.விழியிரண்டு மிழந்திருக்கும் வாழ்க்கையிலே இருயளன்றும் விடிந்தி டாது
பழியெண்ணு முளந்தனிலே பண்புடைய நற்குணமும் படர்ந்தி டாது
வழித்தடங்கள் மாறியபின் வரவேண்டு மிடமென்றும் வந்தி டாது
மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநா ணிலைத்திருத்தன் முடிந்தி டாது.
- புலவர். பூங்கொடிபராங்குசம், புதுச்சேரி.
10.மொழியாலே பொருளீட்டிக் கொழுத்தவர்கள் மிகுந்துவிட்டார் ஊட கங்கள்
வழியாக உணர்வுகளை யழித்திங்கு நற்றமிழை ஞால மெங்கும்
செழித்திடா தமிழ்த்திடுவார் நிறைந்திங்கு நிற்பதனால் சிதைந்த ழிந்து
மொழிப்பற்றி லாதிருக்கு மினம்நெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது.
- அர. செல்வமணி, சத்தியமங்கலம்.
11. மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது
பழமைமிகு தமிழினமே பயன்மிக்க இக்கருத்தைப் பதிபாய் நெஞ்சில்
செழிக்கச்செய் செந்தமிழை ஒழித்துவிடு மொழிக்கலப்பை இழிவை நீக்கு
வழித்தோன்றல் அனைவருக்கும் மொழிப்பற்றை ஊட்டிநல்ல வழியைக் காட்டு
- புலவர் வி. திருவேங்கடம், புதுவை.
12. விழிப்பொடுவண் டமிழ்மொழிநம் முயிரெனக்காத் திடலேநம் விழைவா கட்டும்
அழிந்திடுமே தாய்த்தமிழு(ம்) அயல்மொழிச்சொல் கலப்பதினா(ல்) அதனால் தானே
நுழைந்துவிட்ட பிறமொழிச்சொற் களையெல்லாம் நீக்கிடல்நம் நோக்கா கட்டும்
மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநா ணிலைத்திருத்தல் முடிந்தி டாது.
- பாவலர் பொன். பசுபதி, புதுச்சேரி.
13. மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநா ணிலைத்திருத்தல் முடிந்தி டாது
மழுப்பலிலா வுண்மையிது மன்பதையில் முத்தமிழர் மானங் காக்கத்
தொழுதிடுவோம் தமிழ்த்தாயை; துரத்திடுவோம் தமிழ்ப்பகையைத் தூய நெஞ்சாய்
உழைத்திடுவோ மெல்லாரு மொன்றாவோம் தமிழ்காக்க உறுதி ஏற்போம்
- த. இரத்தினவேலு, புதுவை.
14. மொழிப்பற்றி லாதிருக்கும் இனம்நெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது
மொழி,இனத்தின் குறியீடு! மொழியழிந்தால் இனமழியும் முற்றும் உண்மை
செழிப்புடனே தமிழரென வாழ்ந்திடவே விழைந்திடுவோர் செம்மை யாக
விழிப்புடனே தாய்மொழியாம் தமிழ்மொழியைக் கலப்பின்றி வளர்த்தல் வேண்டும்
- அசோகா. சுப்பிரமணியன், புதுவை.
15. செழிப்புற்று வளர்தமிழின் சீர்கெடவே வகையுளியில் செய்யுள் செய்தல்
பழிப்புக்கே இடமாகும் தமிழ்க்குடியில் கலையுணர்வு படைத்த மேலோர்
எழுத்திலும்தம் பேச்சிலும்போய் ஆங்கிலத்தை எடுத்தாளும் இழிவை ஒக்கும்
மொழிப்பற்றில் லாதிருக்கு மினநெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது
- மு.இராம. கனகராசன், புதுச்சேரி.
16. விழியெனவே விளங்குகின்ற மொழித்துணையால் வேண்டியதை விரும்பப் பெற்றே
எழில்சூழ்ந்த உலகமதை ஏற்றவகை உயர்த்தியிங்கே எழுச்சி காணச்
செழித்துயர மொழிவளத்தால் வளர்ந்திடவே பெருமைகொண்டு சிறக்க வேண்டின்
மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநா ணிலைத்தித்தல் முடிந்தி டாது.
- கோ. கலியபெருமாள், புதுவை.
17. மொழிப்பற்றில் லாதிருக்கு மினநெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது
வழிப்பறிகள் செய்யும்கூட்டம் என்றைக்கும் நிலையாக வாழ்ந்தி டாது
குழிபறிக்கும் குள்ளநரிக் கூட்டமெலாம் கூண்டோடு குலைந்தே போகும்
பழியேதும் புரியாத மக்கனென வாழ்ந்திடுவோம் பாங்காய் நாமே!
- ப. நீலா, புதுச்சேரி.
முன்னரே பரிசு பெற்றறோரின் பாடல்கள் :
1.வழிகண்டு நடவாதார் முன்னேற முடியாது; வளமை யான
விழியிருந்தும் திறவாதார் விளக்கமுற முடியாது; விளங்கும் நல்ல
செழிப்பிருந்தும் சோம்பேறி நன்மையுற முடியாது; செம்மை யான
மொழிப்பற்றில் லாதிருக்கும் இனம்நெடுநாள் நிலைத்திருக்க முடிந்தி டாது!
- வே. இரா. சிவஞானவள்ளல், வேலூர்.
2.செழிப்புடனே விளங்குகின்ற நாடுகளில் தாய்மொழியின் சிறப்பை மக்கள்
விழிப்புணர்வைப் பெறும்விதமாய்ப் பரப்புகிறார் மொழிப்பற்றை விழிக யளன்பார்!
மொழிப்பற்றி லாதிருக்கும் இனம்நெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது!
பழித்தொதுக்கும் வரலாறும் உணர்த்திடடா தமிழ்மகனே பழிகொள் ளாதே!
- பாவலர் மா. வரதராசன், சென்னை.
3.விழிப்பற்று மயக்குற்று வீறிழந்து தடுமாறும் வீண ராகிச்
செழிப்புற்ற நம்மொழியாம் செந்தமிழைப் புறக்கணிக்கும் செயல்மேற் கொண்டு
பழிப்புற்று வாழ்கின்ற பழக்கத்தை நீக்குவதே பண்பா டாகும்.
மொழிப்பற்றி லாதிருக்கும் இனம்நெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது.
- புலவர் மா.சு. மணி, திருக்கழுக்குன்றம்.
4.மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநா ணிலைத்திருந்ததன் முடிந்தி டாது
விழியின்றி மாந்தரினம் நெடுங்காலம் விளங்கிடுமேல் வியப்பே யாகு
மிழிவான வாழ்க்கையினை யினிதாகக் கொண்டுழலு மிவரெஞ் ஞான்றும்
பழிபூணத் துணிகுவரே யல்லாது பைந்தமிழ்க்குப் பயன்ப டாரே.
- சிலம்பூர்க்கிழான், கள்ளக்குறிச்சி.
5.செழிப்புற்று வாழ்ந்தோரும் செல்வங்காத் திறனின்றிச் சீச்சீ என்றே
இழிப்புற்று நிலைதாழ்ந்தே இழிவடைதல் இயல்பேயாம் இதிலேன் ஐயம்
மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநாள் நிலைத்திருத்தல் முடிந்தி டாது
விழிப்புற்று மொழிகாத்தும் இனங்காத்தும் முன்னேற்றம் விளையச் செய்வோம்.
- வே.ச. திருமாவளவன், புதுச்சேரி.
1. கொடுக்கப்பட்டிருந்தது, காய் நான்கு மா ஒன்று தேமா ஒன்று என்ற அமைப்புடைய அறுசீர் மண்டிலத்தின் ஓரடி. அதனை,
மொழிப்பற்றி லாதிருக்கு மினநெடுநா ணிலைத்திருத்தன் முடிந்திடாது என்று சீர்பிரிக்க வேண்டும். சிலர் அதனை 5சீர், 7சீர், 8சீர்களாகப் பிரித்து அமைத்துக் கொண்டிருந்தனர்.
2. மொழிப்பற் றிலாதிருக்கும் என்று சிலர் முதற்சீரை மாச்சீராகப் பிரித்துக் கொண்டனர். இவ்வகை மண்டிலத்தில் முதலில் காய்ச்சீரே வரும்.
3. ஒருவர் இதனைச் சந்தப்பாடலாகக் கொண்டிருந்தார். ஆனாலும் சந்தவிலக்கணம் பிழைபட்டிந்தது.
4. இது, 'பாவலர் பண்ணை' நூலில் அறுசீர் மண்டிலம் -3 ஆகத் தரப்பட்டுள்ளது. சிலர் இதனை அறுசீர் மண்டிலம் - 4ஆகக் கொண்டு பிழைபட்டனர்.
5. கொடுக்கப்பட்ட அடியில் சிலர் தமக்கு வேண்டியவாறு மாற்றங்களைச் செய்து கொண்டனர். அது முறையாகாது.
6. ஒருவர் 'வடிந்தி டாது' என்ற சீர்களை அடுத்து 'ஓழிப்புற்ற' என்ற சீரைப் பெய்திருந்தார். இது புணர்ச்சியால் 'வடிந்தி டா தொழிப்புற்ற' என்றாகிச் சீர்சிதையும்.
7. ஞாயிறு + கு = ஞாயிறுக்கு என்று வாராது. ஞாயிற்றுக்கு என்றே வரும்; அப்படிவரின் அது நாலசைச் சீராகிவிடும்.
8. 'தொழில்தொட்டு' என்பது 'தொழிற்தொட்டு' எனப் புணர்த்தெழுதப்பட்டிருந்தது; 'தொழிறொட்டு' என்பதே சரி. (ற்த - அடுத்து நில்லா)
9. 'வன்செயல் புரிவோரும் மனத்திலென்றும் படிந்திடாது' சொற்றொடர் பிழையாக உள்ளது. பொருளும் தெளிவாகவில்லை.
10. அயற்சொற்கள் : சுயமரியாதை (தன்மதிப்பு), அனுதினம் (அன்றாடம்), குணம் (பண்பு), விதம் (வகை)
குறிப்பு : இவ்வமைப்பில், முதலீரடிகளில் வல்லொற்றுக்கு இடமில்லை. "பந்தைக்கண்டு" என்பது போன்ற வல்லொற்று மிகும் தொடர்களை, 'பந்தைகண்டு' என்று இயல்பாக எழுதுதல் பிழையாகும். சொற்களில் இடையில் வரும் ய், ர், ழ், முதலிய இடையொற்றுகள் அலகுபெறா. 'நண்ப(ர்) கண்டு', 'நன்குண(ர்)ந்து' ஆகிய இடங்களைக் காண்க.