நூல் நிறை

படகுப்பயணமும் பட்டினிப் போராட்டமும் : தி. அழகர்சாமி, தமிழ்க்குலம் பதிப்பாலயம், 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை - 600 004. பக்கங்கள்-80, விலை உருபா 40/-

தமிழர்களை முற்றாக அழித்தொழிப்பதென முடிவு செய்துள்ள சிங்களப் பேரினவெறி அரசு தமிழர்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் உத்தியைக் கையாண்டது. யாழ்ப்பாணம் செல்லும் 'ஏ9' என்ற நெடுஞ்சாலை யையும், பிற வழிகளையும் அடைத்து, அங்குள்ள ஐந்து இலக்கம் தமிழர்களுக்கும் உணவுப் பொருட்களோ, மருந்துகளோ செல்லவிடாமல் தடுத்து, அவர்கள் பட்டினியாலும் நோயாலும் சாகின்ற நிலையை ஏற்படுத்தியது. உலக நாடுகள் பலவும் கண்டித்த, இக்கொடிய செயல் கண்டு, பதறித் துடித்து உதவியிருக்க வேண்டிய இந்திய அரசும், தமிழக அரசும் பாராமுகமாக இருந்தன.

எனவே, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவினர் திரு. பழ. நெடுமாறன் தலைமையில் ஒன்று கூடி மக்களிடம் கையேந்தி ஒரு கோடி உருபாவிற்கும் மேலான பொருட்களைத் திரட்டினர். இப்பொருட்களை இலங்கைக்கு அனுப்ப முன்வந்த செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இந்திய அரசின் இசைவு கிட்டவில்லை.

பல்லாயிரக்கணக்கான மடல்களும், தொலைச்செய்திகளும், தொலைப்படிகளும் அனுப்பப்பட்ட பின்னரும், செனிவாவிலுள்ள அனைத்துலகச் 'செஞ்சிலுவை சங்கத்தில் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் நேரில் முறை யிட்ட பின்னரும், பல்வேறு போராட்டங்களை நடத்தித் தமிழ்மக்கள் வலியுறுத்திய பின்னரும் கூட இந்திய அரசு கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில் திரட்டிய பொருட்கள் கெட்டுப்போகத் தொடங்கின. எனவே இராமேசுவரம், நாகப்பட்டினம் போன்ற இடங்களிலிருந்து படகுகளில் பொருட்களை ஏற்றிக்கொண்டு 12-9-2007 அன்று இலங்கை செல்வதென முடிவு செய்யப்பட்டது. இப்படகுப் பயணம் பற்றியும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த பட்டினிப் போராட்டம் பற்றியும் விவரிக்கின்ற நூலே 'படகுப் பயணமும் பட்டினிப் போராட்டமும்' என்ற இந்நூலாகும்.

படகுப் பயணம் தடுக்கப்பட்ட நிலையில் சாகும்வரை உண்ணாநிலை அறிவித்த திரு பழ. நெடுமாறன் அவர்கள் தோழர்களோடு தளைசெய்யப்பட்டு, அன்று மாலையே விடுவிக்கப்பட்ட போதிலும், நாகப்பட்டினத் திலிருந்து சென்னை சென்றுவிடாமல் பட்டினிப் போராட்டத்தை நடத்தினார். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் பட்டினிப் போராட்டத்தைப் பற்றி நூலாசிரியர் திரு தி. அழகர்சாமி அவர்கள் உணர்ச்சி பொங்கவும், உருக்கமாகவும் எழுதியுள்ளார். போராட்டத்தில் சாதிக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்ட நிலையில் தமிழன் என்கின்ற உணர்வோடு தமிழ்நாட்டுத் தலைவர் பலரும் ஒன்றுபட்டு நின்ற காட்சியை அவர் குறிப்பிட்டுக் காட்டுகின்றார். உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் தந்த பேராதரவினையும் பின்னிணைப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார். உலக நாடுகளில் வாழும் தமிழ்த்தலைவர்களின் உருக்கமிகு வேண்டுகோள்களையும் இணைத் திருக்கிறார்.

நம் கண் முன்னே நிகழ்ந்த வரலாற்றைப் படிக்கவும் பாதுகாக்கவும் தக்க ஆவணமாக திரு தி. அழகர்சாமி அவர்கள் அளித்துள்ள இந்நூல் தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றாகும்.
- ந.மு. தமிழ்மணி.