மனம் திறந்த மடல்கள்
புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி.

அண்ணனுக்குச் செய்தது போன்று தனக்கும் திருமணம் செய்துவையுங்கள் என 10 வயது இளையவன் கேட்பதுபோன்று கன்னடமொழியைச் செம்மொழியாக்க எடுக்கும் கன்னடத்தார் முயற்சி உள்ளது என்ற உவமை என்னைப் பெரிதும் ஈர்த்தது. திருவள்ளுவர் சிலையைக் கோணிப்பைக்குள் முடக்கிவைத்துள்ள கன்னட வெறியர்கள் திராவிட மரபு வழிவந்தவர் தானா? 'தேவர் அனையர்' கதை எனினும் அரசு பணிமுடித்து ஓய்வுபெற்றோர் தமிழுக்காற்ற வேண்டிய தொண்டினையும் செந்நாப் போதாருக்குச் செய்யவேண்டிய நன்றிக்கடனையும் செய்யத் தூண்டி நல்லறிவு புகட்டிற்று. தமிழருவி மணியனின் பேட்டியில் அவர்தம் மொழிவுகளைப் படித்தபோது பேராயக்கட்சியிலிருந்தும் அவரிடமுள்ள தமிழுணர்வும், நடுநிலை தவறா நன்னெறிப் பண்பும் பீறிட்டெழுந்ததைக் காணமுடிந்தது. "ஏன் தமிழ் மக்கள் முன்னால் தெலுங்கில் பாடுகிறார்கள்?" என வினா எழுப்பிய பிரெஞ்சுக்காரரான துய்ப்பிளேக்சுக்கு இருந்த தமிழுணர்வு கூடத் தாய்த் தமிழைக் கொண்டுள்ள தமிழனுக்கில்லையே என்ற ஏக்கமே மேலிட்டது.

கையறு நிலை

புதுச்சேரிக் குறளாயத்தின் அமைப்பாளர் புலவர் கோ. இளங்கோ பாண்டியனார் 3-9-2008 அன்று இறுதி எய்தினார். காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தமிழ்ப்பற் றுடையவர். மக்களுக்குத் தமிழ் விழிப்புணர்வு ஊட்டுவதற்காக மாநிலம் முழுவதும் நடைப்பயணம் செய்து பரப்புரை செய்தவர். தெளிதமிழ் இதழை நடத்தும் தமிழன்பர் அறக்கட்டளையின் உறுப்பினர். திருவள்ளுவர் திருநாள் விழாவை ஓவ்வொராண்டும் ஒருநாள் விழாவாக நடத்திக் குறள்நெறி வளர்த்தவர். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த ஆறுதல் கூறுகிறோம். - ஆசிரியர்