
|
கருத்து மேடை
மா. சின்னு, வேலூர், நாமக்கல்.
சிலப்பதிகாரத்தில் "மனைப்புகுமளவும்" என்பதில் பகரம் தொடைநோக்கி விரிந்தது என்று குறிப்பிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி; நன்றி. எங்கள் +தமிழ் = எங்கடமிழ் எனப்புணர்த்து எழுதுவதே முறையென்று குறிப்பிடுகிறீர்கள். 16.07.08 தெளிதமிழ் 'கதிரொழி காறும் கடவுட்டன்மை' - சிலப். வஞ்சி: வரக் 65 'கடவுட்டானம்' - பெருங்கதை இலாவண உடன் :112 என்று இளங்கோவடிகளும் கொங்குவேளிரும் புணர்த்துப் பாடியது பற்றி விளக்க வேண்டுகிறேன். எடுத்துக்காட்டு. அவட்டொடர்ந்தான் - நன் 255. எங்கள் என்பது உயர்திணைச் சொல்லாதலின் 'எங்கடமிழ்' எனப் புணர்ந்த தெனின், கடவுள் என்ற உயர்திணைச்சொல் ஏன் 'கடவுட்டன்மை' என்று புணரவில்லை? என்கிறீர்கள். உங்கள் வினாவில் முறைமையிருக்கிறது. என்னை ஆழமாக எண்ணிப் பார்க்கச் செய்த இந்த அரிய வினாவைத் தொடுத்தமைக்கு மிக்க நன்றி. அவள் + தொடர்ந்தான் (அவளைத் தொடர்ந்தான்) என்பதை நாவலர் நன். 255ஆம் நூற்பாவுரையில்; 'அன்னபிறவும்' என்ற மிகையால், வருமொழி வினையாய விடத்து உயர்திணைக் கண் டகர ஒற்றுக்கெடாது நிற்றலுக்குக் காட்டாகத் தந்துள்ளார். கடவுட்டன்மை, கடவுட்டானம் என்பவற்றுள் வருமொழிகள் பெயர்கள். தெய்வம், கடவுள் என்பன ஒருபொருளன. 'கடவுட்கற்பினை' தெய்வக்கற்புடையாய் (குறள் 1194 பரி. உரைக்குறிப்பு - வை.மு.கோ.) தெய்வம் - உயர்திணைப் பொருள்மேல் நின்ற சொல்லாயினும் அஃறிணைப் பாலாய் இசைக்கும். காட்டு : தெய்வம் செய்தது (தொல். கிளவி. 57, சேனா. உரை) கடவுள் பேணேம் என்னா (புறம். 106) என்பதற்குத் 'தெய்வங்கள் விரும்பேம் என்னா' என்று பொருள் கூறுகிறது பழையவுரை. இதிலிருந்து கடவுள் என்ற சொல் அஃறிணைச் சொற்போலப் புணரும் என்பது தெளிவாகிறது. காட்டு 1. : வேள் + தன்மை = வேடன்மை என்றாகும். காரணம். வேள் உயர்திணைப்பெயர். கடவுள் + தன்மை = கடவுட்டன்மை என்றாகிறது. கடவுள் + தானம் = கடவுட்டானம் என்றாகிறது. 'அருந்திறற் கடவுட் டிருந்துபலிக் கந்தம்' (மணி 6-60) என்பதையும் இதற்குக் காட்டாகக்கொள்ளலாம். காட்டு 2. : தோள் + தொட்டான் = (தோளைத் தொட்டான் -2 ஆம் வேற்றுமைத்தொகை - வருமொழி வினை) வேடன்மை - (1), தோடொட்டான் - (2) என்ற இரண்டு நிலைக்கும் 'பிறற்குரியா டோடோயாதார்' (குறள் 149) என்ற ஒரே தொடைரைக் காட்டாகத்தரலாம். 1. பிறற்குரியாள் + தோள் = பிறற்குரியா டோள் 2. தோள் + தோயாதார் = தோடோயாதார். கடவுள் என்ற சொல் ஆகுபெயராகவோ, விகுதிபெற்றோ உயர்திணைப் பெயராக வருவதுண்டு. காட்டு : கடவுளர்... வந்தான் (சீவக.1124) - ஆகுபெயராக முனிவனை உணர்த்தியது. அவர் கடவுளர் (குறள் 698 பரி. உரை) - உயர்திணை விகுதிபெற்றது. இவை நம் முன்னோரின் நூல்களை ஆய்ந்ததால் எனக்குத் தோன்றிய கருத்து. இதில் உங்களுக்கு வேறு கருத்து இருப்பின் அன்புகூர்ந்து எழுதுமாறு வேண்டுகிறேன். |