கண்ணிற் பட்டதும் கருத்திற் பட்டதும்

1. திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்திலும் பொறியியல் படிப்புத் தமிழில் கொண்டுவரப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்பையும் தமிழில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகிறோம். மேலும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆட்சிமொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அங்குப் பணியாற்றும் எழுத்தர்கள் தமிழில்தான் கோப்புகள் எழுதவேண்டும் என்று கூறியிருந்தோம். முதலில் தயக்கம் காட்டினார்கள். தவறாக எழுதிவிடுவோமோ என்று அஞ்சினர்; பிறகு எழுதிப் பழகிவிட்டார்கள் இப்போது அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருக்கும்.

இதைத்தவிர எங்கள் பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்றுள்ள அனைத்துக் கல்லூரிகளும் தமிழில்தான் எங்கள் பல்கலைக்கழகத்துக்கு மடல் எழுதவேண்டும். தமிழில் எழுதினால் மட்டும்தான் பதில் கிடைக்கும். ஆங்கிலத்தில் எழுதினால் பதில் கிடைக்காது. இதற்கான உத்தரவைப் பிறப்பித்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பிஉள்ளோம். இதுபோன்று மற்றப் பல்கலைக்கழகங்களும் மாற்றத்தைக் கொண்டுவந்தால் தமிழ்மொழி மக்கள் மொழியாக மாறும் என்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ கூறினார். [தினமணி (31-08-2008 பக்கம்-7)]

திருச்சிப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ தன் ஆளுமைத் திறத்தால், அறிவாற்றலால் ஆவதறிந்து பல்கலைக் கழகத்தில் ஆற்றிவரும் தமிழ்ப்பணியைச் சென்னைச் செம்மொழி நடுவண் அரசு நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தாரும் அறிந்து கடைப்பிடித்துச் செம்மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் தமிழாட்சியை நடைமுறைப்படுத்திட முனைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

2. இப்போது நடந்துவரும் போரினால் இலங்கையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளனவே? என்ற வினாவுக்கு "இதற்கு முன்புவரை போர் நடக்கும் சில நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டுத் திறக்கப்படும். ஆனால் இப்போது சிக்கல் தீவிரமடைந்துள்ளதால் கடந்த இரண்டு மாதங்களுக்குமேலாகப் பள்ளிகள் மூடப்பட்டுக்கிடக்கின்றன". (இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வம் அடைக்கலநாதன், குமுதம் நேர்காணல். (1.09.2008)

இலங்கைத் தமிழர் பிள்ளைகள் படித்தால் என்ன! படிக்காவிட்டால் என்ன! தமிழன் வீட்டுப்பிள்ளைதானே! எனும் இழிவு மனப்பான்மை கொண்டிருக்கும் சிங்கள அரசுக்குப் படைக்கருவிகள் கொடுத்து ஊக்குவிக்கும் இந்திய அரசின் போக்கு மாறவேண்டும். தமிழர் "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே" எனும் பாவேந்தரின் வைர வரிகளை மனத்தில் கொண்டு தமிழரின் ஒற்றுமையை வலிமையுறச் செய்வோம்.

நாடாளுமன்றத்தில் நாங்கள் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றிப் பேசும்போது மற்ற உறுப்பினர்கள் எங்களை அடிக்க வருவார்கள். ஆனாலும் நாங்கள் தொடர்ந்து பேசினால், அந்தத்துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவையில் இருக்கமாட்டார்கள். நாம் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசினாலாவது இந்தப் பேச்சுகள், அவலங்கள், உலக நாடுகளுக்குத் தெரிந்து அவர்கள் மூலமாவது இலங்கையில் தமிழினம் காப்பற்றப்படும் என்ற நம்பிக்கையில்தான்" "இலங்கை அரசு தமிழர்களின் இந்தச் சிக்கலுக்கு அரசியல் முறைப்படியான தீர்வை முன்வைத்தால் புலிகள் இதுகுறித்து ஆய்வுசெய்வார்கள், இல்லை எனில் இலங்கை இரண்டாவதைத் தவிர வேறு வழியில்லை" (மேற்படி நேர்காணல்)

இலங்கைச் சிங்களஅரசு, இலங்கைத் தமிழர்கள் மீது நடத்திவரும் அட்டூழியங்களையும், அவலங்களையும் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் ஐக்கியநாடுகள் அவை நன்கு அறிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆயினும், அது கூடச் சில நேரங்களில் நெறிபிறழ்ந்த அரசியல் முடிவுகளை எடுக்கிறது. இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைமைக் கொறடாவுமான திரு செல்வம் அடைக்கலநாதன் கூறியிருப்பதைப் போல இலங்கை இரண்டாகப் பிரிந்து தமிழீழம் அமைவதே உறுதியான இறுதித் தீர்வாகும்.

3. இராசீவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்யும்படி தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ஆர். கிருட்டினய்யர் பின்வருமாறு : மடல் எழுதியுள்ளார்.

"திறன்மிக்க ஆட்சிக்காகவும், யோற்றுதலுக்குரிய கருணைக்காகவும் உங்களைப் பெரிதும் மதிக்கிறேன். உங்களுக்கு அரிதாகவே எழுதக்கூடியவன் என்றாலும், ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்காக இப்போது இம்மடலை எழுதுகிறேன்".

"முதலமைச்சரின் பரிந்துரைப்படி மாநில ஆளுநரும், உள்துறை அமைச்சரின் பரிந்துரைப்படிக் குடியரசு தலைவரும் நீதிமன்றத்தால் சாவுத்தண்டனை விதிக்கப்பெற்ற குற்றவாளியின் தண்டனையைக் குறைத்து அவரை விடுதலை செய்யலாம்." உங்கள் மாநிலத்தில் சாவுத்தண்டனைக் கைதியாக இருந்துவரும் அ.ஞா. பேரறிவாளனுக்கு அரசமைப்புச் சட்டப்படியான கருணையை நல்குமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். 17 ஆண்டுகளாய்த் தனிமைச்சிறையில் அடைபட்டிருப்பது ஒரு கொடுவதைதான். இந்த வேதனையே தண்டனைக் குறைப்புக்கு ஒரு பொருத்தமான காரணம்தான் என்ற கருத்தை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையிலும், உணர்ச்சியுள்ள சட்டவியலன் என்ற முறையிலும், பட்டறிவு வாய்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி என்ற முறையிலும் என் கடமையாகக் கருதி இவ்வேண்டுகோளை உங்களுக்கு விடுக்கிறேன்.

"சீரிய மாந்தநேயர் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த நல்வாய்ப்பை முன்னிட்டு ஒரு மாந்தநேயமிக்க முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் தமிழ்நாட்டு ஆளுநரின் கருணை அதிகாரத்தைச் செலுத்தப் பரிந்துரைத்து பேரறிவாளனை விடுவிக்க வேண்டுமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்." (தமிழோசை 6-9.2008 பக்கம் 9 )

நீதிபதி வி.ஆர். கிருட்டினய்யர் அவர்கள் உள்ளம் வருந்தி எழுதியிருக்கும் மடலைப் படித்தால் வன்மனத்தர் கூட நன்மனத்தராகித் தூக்குத்தண்டனை பெற்றுத் தனிமைச் சிறையில் 17 ஆண்டுகளாய்த் துன்பம் அடைந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வர். நம் கலைஞர் ஆழ்ந்த கருணை மிக்கவர், நீதிபதி கிருட்டினய்யரின் வழிகாட்டுதலின்படி அறிஞர் அண்ணாவின் நூறாம் ஆண்டுப் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டுப் பேரறிவாளனை விடுதலை செய்வதற்குக் கட்டாயம் ஆளுநர்க்குப் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.

இதே வழக்கில் 14 ஆண்டுகள் வாழ்நாள் தண்டனை பெற்று 17 ஆண்டுகளாய்ச் சிறையில் துன்புற்று வாடிக்கொண்டிருக்கும் நளினியையும் அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்வதற்குக் கலைஞர் முயல்வார் என்றும் நம்பலாம்.

"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு" (குறள்) - செ. இராமலிங்கன்.