அன்னைமொழி தன்னில்அர சேற்றுக் கொண்ட
அமைச்சர்களைப் பாராட்டி வரவேற் கின்றோம்!
முன்னிருந்தோர் செய்பிழைகள் தமையே செய்து
முகங்குலைந்து போகாதீர்! முதன்மை யாகப்
பின்னும்அந்தப் 'பாண்டி'எனும் பெயரே போற்றிப்
பெருந்தவற்றைச் செய்யாதீர்! மழலைப் பூக்கள்
அன்னையிடம் பாலருந்த விடுங்கள்! வேண்டா
ஆங்கிலப்பால் குடிப்பாட்டிக் கெடுக்கா தீர்கள்!
அலுவல்மொழிச் சட்டத்தை மதித்தி டுங்கள்!
அரசாணைப் படியேகை யெழுத்தி டுங்கள்!
நலமுடனே ஊராளத் தேர்ந்தெ டுத்த
நல்லோருக் கதிகாரம் கொடுத்தி டுங்கள்!
விலையின்றித் தொலைக்காட்சி, அரிசி என்று
விரகாகக் கொடுத்தெம்மைக் கெடுக்கா தீர்கள்!
மலைபோல உங்களையே நம்பி யுள்ளோம்
மக்களெலாம் மகிழ்ந்திடநல் லாட்சி தாரீர்!
- இரா. திருமுருகன்