
|
மக்கள் தொண்டர்கள் ஆட்சியைக் கைப்பற்றுக
இந்த நாட்டில் பெரும்பாலான அரசியல் வாணர்கள் நேர்மையாளர்கள் அல்லர். தொண்டு நோக்கத்தோடு அரசியலுக்கு வந்தவர்களும் அல்லர். எந்த ஒழுங்கு முறையும் இல்லாத இந்தச் செயற்கை நாட்டில் அரசியல் என்பது நேர்மையில்லா வழிகளில் பொருள் ஈட்டுவதற்கான ஒரு தொழில். தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையில் குற்றங்கள் செய்வதற்கான ஒரு வாய்ப்பு. அதிகாரத்தினால் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையம் பயன்படுத்தி எல்லாவகை இன்பங்களையம் நுகர்வதற்கான வேட்டைக்காடு. அதிகார வலிமையால் பிறரை அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது குதிரை ஏறும் ஒரு மகிழ்ச்சி விளையாட்டு. அரசியலுக்கு வருபவர்களுக்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லை. புறத்தகுதியும் தேவையில்லை அகத்தகுதியும் தேவையில்லை. எந்தக் காட்டானும் வரலாம். எந்தக் கழுதையும் வரலாம். வலிமையும் செல்வாக்கு மிருந்தால் அடாவடித் தனமும் எத்துவேலையும் தெரிந்தால் எவன் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் வெற்றி பெறலாம். ஆட்சியிடத்தில் அமர்ந்து கொள்ளலாம். நினைத்தபடி ஆட்டம் போடலாம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கலாம். சொந்த மண்ணையே விற்றுத்தின்னலாம். இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்? பொருள் ஈட்டுதலே குறிக்கோள். அதற்கு என்ன தவறும் செய்யலாம். தண்டனை கிடையாது என்று ஆகிவிடும்பொழுது யார்தான் என்னதான் செய்ய மாட்டார்கள்? ஒருவன் தன்னைவிட வலியவனாயிருக்கும் மற்றொருவனிடம் வாலாட்டமாட்டான். வாலாட்ட முடியாது. எனவே தான் நலிந்து மெலிந்து அப்பாவி மக்கள் மட்டுமே அரசியலாளனிடம் சிக்கிக்கொள்நகிறார்கள். கீழ்த்தட்டு மக்கள் எப்பொழுதும் எங்கும் ஒடுக்கப்பட்டவரும் ஒதுக்கப்பட்டவருமாகவே இருப்பர். மேல் தட்டுக்காரர்கள் எப்பொழுதும் எங்கும் சுரண்டல் காரர்களாகவும் பிறரின் குருதியை உறிஞ்சிப் பிழைப்பவருமாகவே இருப்பர். பெரும்பெருந்தொழில் முதலைகள் ஆலை அரசர்கள் வணிகவேந்தர்கள் எல்லாரும் மேல்தட்டுக்காரரே. இவர்களுக்கும் தங்கள் கொழில்களை நடத்தி மேலும் மேலும் பொருள் குவித்துக்கொண்டு செல்வதுதான் ஒரேநோக்கம். இவர்கட்கு மனச் சான்றும் இல்லை. மக்கள் நேயமும் இல்லை. தங்கள் ஊதிய நோக்கம் நிறைவேற வேண்டும். அதற்கு எதைவேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பதில் அவர்களுக்கும் அரசியல் வாணருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இன்று பெருங்கொள்ளைக்காரராக உலகெங்கும் காலுன்ற இடந்தேடித்திரியும் பன்னாட்டு வாணிக நிறுவனங்களைப்போல் பெருஞ்சுரண்டல்காரர்கள், மக்கள் குருதியை உறிஞ்சிச் சப்பி எடுத்து அவர்களைச் சக்கையாகத் தாக்கி எறிபவர்கள் எந்த உலகிலும் இல்லை. எனவே, அதிகாரத்தில் இருக்கும் அரசியல் வாணரும் இவர்களும் தங்கள் சுரண்டலையும் குருதி உறிஞ்சலையும் திட்டமிட்டு மேற்கொள்வதில் பெருங் கூட்டுக்கொள்ளையராக இருந்து தங்கள் வேட்டைகளை நடத்திக்கொள்கின்றனர். இவர்களால் பலிஆக்கப்படுபவர்கள் அப்பாவி அடித்தட்டு மக்களே. ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் அரசு அவ்வப்பொழுது பொருள் தட்டுப்பாடு, முட்டுப்பாடு, பற்றாக்குறை என்று பேசுகிறது. பஞ்சப் பாட்டுப் பாடுகிறது. விலைவாசிகள் ஏறிவிட்டன என்று ஓலம் இடுகின்றது. அடிக்கடி பொருள்களின் விலையை ஏற்றுகிறது. வரியை உயர்த்துகிறது. போலிப்பொருளியல் சீர்திருத்தங்களை மேற்கொள்கின்றது. போலி மின்தடையை ஏற்படுத்துகிறது. மக்கள் அலறுகின்றனர். கிளர்ச்சி செய்கின்றனர். போராடுகின்றனர். எல்லாம் கொஞ்ச நாள் தான். அதன்பின்பு அடங்கிப் போகின்றனர். அரசின் சூழ்ச்சிகள் வெல்கின்றன. உண்மையில், பற்றாக் குறையுமில்லை ஒன்றுமில்லை. மக்களுக்குக் கிடைக்கவேண்டியவை எல்லாம் வேறுபக்கம் திருப்பி விடப்படுகின்றன. அரசியல்வாணன் மக்களுக்கு இல்லை என்று கூறிவிட்டுப் பணக்காரனுக்குப் பத்துமடங்கு மிக்க விலைக்கு விற்கிறான். தான் தரகு வாங்கிக் கொல்கிறான். பணக்காரன், கொள்ளை முதலாளி, தொழில் முதலை, பன்னாட்டுவாணிகன் தன் தேவைகளுக்கு என்ன விலை கொடுக்கவும் அணியமாயிருக்கிறான். அவன் அரசியலாளனிடம் ஒப்பந்தம் பேசிக்கொள்கிறான். அதனால் மக்களுக்குக் கிடைக்க வேண்டியது கொள்ளை வாணிகனுக்குப் போய்ச்சேர்கிறது. அரசியல்காரனுக்குக் கிடைக்க வேண்டிய பங்கு கிடைத்து விடுகின்றது. எளிய மக்களுக்குத்தான் பஞ்சம், பசி, பற்றாக்குறை, விலை ஏற்றம், மின்தடை, சூழல் அழிப்பு, வாழிடப் பறிப்பு, சிறு தொழில் பறிப்பு ஏழைமக்களின் இடங்களும் எளிய வாழ்க்கைத் தொழில்களும் இப்படித்தான் பறிபோகின்றன. எல்லாச் சிறு தொழில்களிலும், குடிசைத் தொழில்களிலும் கூடக் கொள்ளை வாணிகன் வந்து காலூன்றிக் கொள்கின்றான். முன்னேற்றம் வளர்ச்சி என்ற போர்வையில் அவன் கொள்ளை வாணிகம் தான் வெற்றியுடன் நடக்கின்றது. உப்பு வாணிகம் ஒன்றை எடுத்துக் கொண்டால் போதுமே! இவர்களின் முதலாளியச் சூழ்ச்சிகள் எவ்வளவு கொடியவை, மக்களுக் கெதிரானவை என்பதைத் தெரிந்துகொள்ளலாமே! நாம் தாய்மொழியே பயிற்றுமொழி, தாய்மொழியே பயிற்று மொழி என்று அடித்துக்கொள்கிறோம். ஏன் நடக்கவில்லை? அரசியல் வாணனுக்கென்ன ஆங்கிலம் பயிற்றுமொழியாயிருப்பதில் அவ்வளவு ஈடுபாடா? அப்படி எல்லாம் இல்லை. அவனுக்குத்தான் எந்தக் கொள்கையும் கிடையாதே! காசுதான் அவன் கொள்கை. காசு கிடைக்கிறதா, அவன் எதைவேண்டுமானாலும் செய்வான். அப்பாவித் தமிழ்மக்களின் அறியாமையை முதலீடாகக் கொண்டு இன்று பேரளவில் நடந்துவருகிறது ஆங்கில வழிக்கல்வி வாணிகம். மிகப்பெரிய அறுவடையை மிகப்பெரிய கொள்ளையை நடத்தும் இக்கல்வி வாணிகக் கயவர்கள் மிகத் தவறான வகையில் ஆகூழாகத் தங்களுக்குக் கிடைத்திருக்கும். இப்பெரிய சுரண்டல் வாய்ப்புத் தம் கைநழுவிச் செல்வதைப் பொறுத்துக் கொண்டிருப்பார்களா? எங்கெங்கே என்ன என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் அவர்கள் செய்யாதிருப்பார்களா? அடிக்கும் கொள்ளையில் பங்கு கொடுத்தால் அரசியல்வாணன் அவர்கள் பக்கம் நிற்பான். இந்தியப் போலி நாட்டின் விடுதலை வரலாற்றில் அறுபதாண்டுகட்கும் மேலாக இதுதானே நடந்துவருகின்றது. இப்படித் தனக்குக் கிடைக்கும் பங்கே இத்தனை இலக்கம் என்றால் தானே முன்வந்து கொள்ளையடித்தால் இன்னும்பல மடங்குஅடிக்கலாமே எனவே அவர்களோடு சேர்ந்து அரசியல் வாணனும் அவன் மாமனும் மச்சானும் ஆங்கில வழிப் பள்ளிகளை நடத்துகின்றனர். உண்மை இப்படி இருக்க நாம் சும்மா தமிழ் தமிழ் என்று கத்தி என்ன பயன்? இந்த நாட்டில் அரசியலாளன், கல்வியாளன் எவனும் எக்கொள்கையையும் கடைப்பிடிப்பதில்லை. எதில் காசு வருகிறதோ அதுதான் அவன் கொள்கை. தாய் மொழிவழிக் கல்வியாவது, மண்ணாங்கட்டியாவது! இந்நாடு மக்களுக்காக இல்லை, இல்லை, இல்லை. உள்நாட்டில் கொள்ளையடிக்கும் தொழில் வாணிகக் கொள்ளையர்களுக்காகவும், இந்த நாட்டை எப்படியாவது பொருளியல் சுரண்டல்கட்கு ஆட்படுத்தி அதை அப்படியே விழுங்கிவிட நினைக்கும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் வாய்ப்புக்காக வும் மட்டுமே நடத்தப்படுகின்றது. நாம் என்ன செய்ய முடியும்? மக்கள் புரட்சி ஏற்பட்டு, இன்றைய கொள்ளைக்காரர்கள் தூக்கி எறியப்பட்டு, உண்மைத் தமிழுணர்வாளர்கள், நேர்மையாளர்கள், தூய உள்ளம் படைத்தவர்கள், மாந்த நேயமே குறிக்கோளாகக் கொண்ட மக்கள் தொண்டர்கள் ஆட்சியைக் கைப்பற்றினாலன்றித் தமிழ் தமிழகத்தில் பயிற்றுமொழியாவது பற்றிக் கனவுகூடக் காணமுடியாது, முடியாது, முடியாது. ம. இலெ.தங்கப்பா |