தேவர் அனையர் . . . - சிறுகதை
பொறிஞர் அகன்.

ஒரு நாள் காலை, வீட்டுவாயிலில் அழைப்பு மணிச் சொடுக்கியை இயக்கியவாறே நின்றிருந்தார் கந்தப்பர்! வரவேற்றோம்; விருந்தோம்பினோம்.

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு"

- என்றல்லவா நம் தமிழியப் பேராசான் கட்டளையிட்டுள்ளார்? ஒருவாரத்திற்கும்மேல் எம்இல்லில் உண்டுறைந்து நிலம், வீட்டுமனை - என வாங்குவதற்காக அலைந்தார்; என்னையும் அலைக்கழித்தார்!.

"எனக்குக் கண்புரை அறுவைப்பண்டுவம் செய்ய வேண்டியுள்ளது. இங்குள்ள மருத்துவ மனையில் அறுவை செய்தபின் உங்கள் இல்லத்தில் ஒருவாரமாவது தங்கநேரிடும். வேளை தவறாமல் கண்களுக்குச் சொட்டுமருந்திட வேண்டும். நாளுக்கு மூன்று வேளை காரட்சாறு குடிக்கக்கொடுக்க வேண்டும். புலால் எதனையும் சமைக்க வேண்டாம். அதன் நாற்றமே எனக்குக் குமட்டும்" என்றார் கந்தப்பனார்! அவர் கூறிய படியே, மருத்துவ மனையிலிருந்து கண் கட்டோடு வந்தார். கழிவறை இணைந்த அறையில், கட்டில், பஞ்சுமெத்தை போட்டு அவரைப் படுக்கச் செய்தோம். சொட்டு மருந்திட்டு, காரட்சாறு கொடுத்து அவருடைகளைத் துவைத்துத் தேய்த்து, அவர் விருப்பப்படியே உணவு சமைத்துப் புலால் ஒதுக்கி, வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்கி... என, நானும் கிளியும் பரிந்தோம்பினோம். ஒருவாரம் முடிந்து அவரே அவரின் தேவைகளைச் செய்து கொள்ளத்தொடங்கினார். நாள்கள் பத்தும் கடந்தன. சென்னைக்குச் செல்லும் நினைப்பின்றியே அவர் தென்பட்டார். செல்விருந்தாக அமையாது, தொடர் விருந்தாக எங்கள் இல்லத்தின் ஒருவரைப் போலவே இயங்கினார்.

அன்று காலை உணவுக்குப்பின், "ஐயா.... தங்களின் சென்னைப் பயணம் எப்போது......" என்றேன் தயங்கியவாறே!

"ஒரு மூன்றுநாள்கள் கடந்து, தொடர்வண்டியில் இருக்கையை முன்பதிவு செய்து வாருங்கள். எந்த நாளில் பதிவு வாய்க்கிறதோ அந்த நாளில் செல்வேன்." "இன்று மாலையே முன்பதிவு செய்து வருகிறேன்." "இன்றைக்கா..? ஏன்... ? சரி ... சரி.... ஒரு மூன்று நாள்கள் கழித்து ஒருநாளில் பதிவு செய்யுங்கள்." "சரி ஐயா".. என்று புறப்பட்டேன் சந்திப்புக்கு! "நாளைக் காலை வண்டியில் தான் இருக்கை உள்ளது. அடுத்த நான்கு நாள்கள் விழா- விடுமுறை என்றிருப்பதால் எல்லா வண்டிகளிலும் முன்பதிவுகள் முடிந்து விட்டன"- என்றார் முன்பதிவு அலுவலர். மறுநாள் காலை வண்டியில் இருக்கையைப் பதிவுசெய்து பயணச் சீட்டைக் கொடுத்தேன். "நாளைக் காலை வண்டிப் பயணச்சீட்டா...?" என்றார் கடுத்த முகத்துடன். மறுநாள் காலையில் நானும் உடன் சென்று, அவரை வண்டியில் அமரவைத்து வண்டி புறப்பட்டுச் சென்ற பின்பே வீடுதிரும்பினேன்!

கந்தப்பனார் சென்றபின், ஓர் ஐந்து நாள்கள் கழித்து மடலொன்று வந்தது அவரிடமிருந்து! பிரித்துப் படித்தேன். உங்களுக்குக் கொடுத்ததொகை, நான் நடத்தும் அறக்கட்டளைக் குரியது. அறக்கட்டளையின் தணிக்கை அதிகாரி. நான் உங்களுக்குத் தொகை கொடுத்ததை முறையற்றதென்றும், மிகவிரைவில் திருப்பிப் பெறுங்கள் என்றும்' கூறுகிறார். எனவே, மிகவிரைவில் அத்தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு உங்கள் ஆவணங்களைப் பெற்றுக்கொள்க. - கந்தப்பன்" சுருக்கமாகவும், சுருக்கென்றும், நறுக்கென்றும் இருந்த அம்மடல், என்னுள் ஆற்றாமையை உருவாக்கிற்று. கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தேன்.

மூன்றாண்டுகள் முடிந்தபின் திருப்பிக்கொடுக்கச் சொன்னவர், ஒரு மாதம் முடியுமுன்பே கொடு என்கின்றாரே...? ஏதோ சூதான நோக்குடனேயே இவர்தொகை கொடுத்திருக்கவேண்டும். அந்நோக்கம் எம்மிடம் ஈடேறாது என்று தெளிந்தறிந்தபின் தொகையை உடனே கொடுக்கச் சொல்கிறார்....!

தலையில் வேய்ந்த முடியனையர் என்றெண்ணி மதித்தேனே... தலையின் இழிந்த மயிரனையர் எனப் புலப்படுத்தி விட்டாரே....! உடன் எழுந்தேன்; விரைந்தேன்; கண்டேன் உள்ளூர்ச் செல்வர் ஒருவரை. தமிழ் மன்றக் கட்டடத்தின் ஆவணத்தைப் பிணையாகக் கொடுத்து ஓர் இலக்கம் உருவா கடன்பெற்றேன். கந்தப்பன் பெயரில் வங்கி வரைவோலையைப் பெற்று.....

"கந்தப்பனார்க்கு வளன்விடுப்பது. வணக்கம்.
நலமே வாழ்க. எனக்கு உதவியதைப்போன்று எவருக்கும் உதவிட வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். நீங்கள் கொடுத்த கடன் தொகைக்கான வங்கிவரைவோலையை இதனுடன் இணைத்துள்ளேன். பெற்றுக்கொண்டு எனது ஆவணங்களை அனுப்புங்கள்!. நன்றி வளன்" என்ற மடலொன்றையும் எழுதி இணைத்து விரைவுப் பதிவஞ்சலில் விடுத்துவைத்தேன். அடுத்த மூன்றாம் நாளில் என் ஆவணங்கள் பதிவஞ்சலில் வந்தடைந்தன மேல் மடல் ஏதுமின்றி!!! தமிழறிஞருள் இப்படியும் ஒருவரா....? தமிழைப்போற்றுவோர் நற்பண்புடையோராகவே இருப்பர் - என்றெண்ணி ஏமாந்தேனே....? தமிழைக் கூறி, தமிழுக்கென்று கூறி, என்னைக் கெடுக்கத் துணிந்துள்ளாரே.....!

"தேவர் அனையர் கயவர்; அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்"

என்ற திருக்குறள் மனத்திரையில் பளிச்சிட்டது! பேராசானைப் போற்றி வணங்கினேன். அது என் மனப் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது! ஆற்றாமை தணிந்து மனம் அமைதியுற்றது!

(முற்றும்)